×

பாம்புகடித்து பச்சிளம் குழந்தை உயிரிழந்த மலைக்கிராமத்துக்கு சாலை அமைக்கும் முதற்கட்ட பணிகள் தொடக்கம்..!!

வேலூர்: பாம்புகடித்து பச்சிளம் குழந்தை உயிரிழந்த மலைக்கிராமத்துக்கு சாலை அமைக்கும் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகில் உள்ள அத்திமரத்துக்கொல்லை மலைக்கிராமத்தில் பாம்பு கடித்த ஒன்றரை வயது குழந்தையை அணைக்கட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால் உடல் முழுவதும் நஞ்சு பரவி வழியிலேயே அக்குழந்தை இறந்துவிட்டது. உடற்கூறாய்வுக்குப் பிறகு அவசர ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்ட குழந்தையின் உடல், சாலை வசதி இல்லாததால் பாதியில் இறக்கப்பட்டு, 10 கி.மீ தொலைவுக்கு பெற்றோரே நடந்து சுமந்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை பாம்புகடித்து குழந்தை உயிரிழந்த மலைக் கிராமத்துக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்து குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர், மலை பகுதிக்கு சாலை அமைப்பதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளது. அதற்கான அளவீடு பணிகளும் ஏற்கனவே செய்துள்ளோம். இருப்பினும் இந்த சம்பவத்தை தொடர்ந்து மிக விரைவாக சாலை பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வருகிறது என்பதால் ஒன்றிய அரசின் அனுமதி பெற்று அதிகபட்சமாக 6 மாத காலத்திற்குள் சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெறும். அதேபோல் இப்பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளி உள்ளிட்டவையும் ஏற்படுத்தப்படும் என கூறி இருந்தார். ஆட்சியர் ஆய்வை தொடர்ந்து மலைக்கிராமத்துக்கு சாலை அமைப்பதற்கான அளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் அளவிடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பாம்புகடித்து பச்சிளம் குழந்தை உயிரிழந்த மலைக்கிராமத்துக்கு சாலை அமைக்கும் முதற்கட்ட பணிகள் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Mountain Mountain ,Vellore ,Vellore District ,Living Mountain Mountain ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்ட எல்லையில் 5 மதுக்கடைக்கு...